உதயநிதி ஸ்டாலின் காலை தொட்டு வணங்கிய தஞ்சாவூர் மேயர் – தவறான முன் உதாரணம் இது
உதயநிதி ஸ்டாலின் காலை தொட்டு வணங்கிய தஞ்சாவூர் மேயர் – தவறான முன் உதாரணம் இது

திமுக இளைஞரணி செயலரும், எம்.எல்.ஏ.,வுமான உதயநிதியின் காலில்,டொபுக் என விழுந்து வணங்கிய தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் ராமநாதனின் செயல் அரசியல் வட்டாரத்தில் ’தவறான செயல்’ என்று விவாதிக்கப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு பதவிக்கும் ஒவ்வொரு விதமான அதிகாரங்கள் இருக்கின்றன. அதை பின்பற்றுவதையே மரபு என்கிறோம். மரபு பாதுகாக்கப்படும் போதுதான் அந்த பதவிக்கே மரியாதை இருக்கும். மரியாதை கெட்டு போன எந்த பதவியும் மாண்புடன் இருக்காது.
எனவேதான் ஆதிகாலத்தில் இருந்து பழைமை என்று பேசப்படும் பல நடைமுறைகளை மரபு என்று சொல்லி பின் பற்றி வருகிறார்கள். பதவிகள் அதிகாரத்தை இழந்தால், அது நாளடைவில் செயலற்றதாக, வலுவற்றதாக, மதிப்பற்றதாக ஆகிவிடும். மதிபற்ற பதவியால் மக்களை நல்வழிப்படுத்தவோ முறைப்படுத்தவோ முடியாது. அதற்காகவே மரபுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.
அதிகாரத்திற்கு எதிராக சிலர் சோசலிஷம் பேசலாம். அது இடைக்கால நிவாரணம்தான். அதிகாரமற்ற எந்த பதவியும் வீணாக போய்விடும். செங்கலில் உழைப்பை கழித்துவிட்டால் அது எப்படி வெறும் மண் என்று ஆகிவிடுமோ அதுபோல்தான் பதவியில் அதிகாரம் கழிக்கப்பட்டால் சோடை பதவி ஆகிவிடும்.
அதையெல்லாம் கருத்தில் கொண்டுதான் கடந்த காலத்தில் இருந்தவர்கள் பதவிக்கு தக்க அதிகாரம், அதற்கு மக்கள் கொண்டுக்க வேண்டிய மரியாதை அனைத்தையும் வகுத்து தந்திருக்கிறார்கள். கட்சி தலைவரிடம் விசுவாசம் காட்ட வேண்டும் அவரின் ஆதரவாளராக இருக்க வேண்டும் என்று அரசியல் வாதிகள் ஆசைப்படுவதில் தவறில்லை. அதற்காக மக்கள் தந்த பதவியை சீர்குலைக்க கூடாது.
அடுத்த முதல்வர் ரேஞ்சுக்கு திமுகவில் தூக்கப்பட்டு வரும் உதயநிதிஸ்டாலின்எம்.எல்.ஏ., ஊர் ஊராக சென்று திருவிட திருவிழா என்கிற பெயரில் கட்சியினரை சந்தித்து வருகிறார். இது அவருடை அரசியல் பணி. அது குறித்து யாரும் கேள்வி கேட்க முடியாது. ஆனால், அப்படி போகும் இடத்தில் மக்கள் ஆதரவுள்ள மக்கள் பிரதிநிதிகள் அவமரியாதைக்கு ஆளாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
தஞ்சாவூர் மேயர் தனது காலில் விழுவதை தடுத்திருக்க வேண்டும். எதிர்பாராமல் விழுந்து வணங்கிவிட்டார் என்றால் அதன் பிறகாவது அவரை கண்டித்திருக்க வேண்டும். அப்போதுதான் இது போன்ற உயரிய பதவியில் உள்ளவர்கள் காலில் விழுவதை தடுக்க முடியும். இதெல்லாம் அரசியலில் சகஜம், இப்படி செய்வதுதான் தலைவன் என்கிற கிரீப் கிடைக்கும் என்றால், அடுத்தவர்களை விமர்சனம் செய்யும் தகுதி போய்விடும். வயதில் சிறியவரான உதயநிதி, இதுபோன்ற காரியங்களில் கண்டிப்புடன் நடந்து கொண்டால் அனைத்து வகையான பொதுமக்களால் ஏற்றுக் கொள்ளப்படுவார்.
மாறாக இது போன்ற காரியங்களை ஊக்கப்படுத்தும் வகையில் கண்டு கொள்ளாமல் இருந்தால், பொதுமக்களின் எதிர்ப்புக்கு ஆளாக நேரிடும். வளரும் அரசியல்வாதி இதையெல்லாம் கவனிக்க வேண்டும். மேயர் உடையில்லாமல் இது போன்று செய்திருந்தால் கூட தவறாக இருந்தாலும் அதை பெரிதாக எடுத்து கொள்ள மாட்டார்கள். மேயர் அங்கியுடன் இதுபோன்று செய்தது நிச்சயமாக தவறுதான். மேயர் பதவியை அவமதித்த இந்த விவகாரத்தில் மேயரும், அதை தடுக்காத உதயநிதிஸ்டாலினும் குற்றவாளிகளே!