தூத்துக்குடியில் ஈ.பி.எஸ் ஆதரவாளர்கள் சுவர் விளம்பரங்களில் உள்ள ஓ.பி.எஸ் பெயரை அழித்தனர்
தூத்துக்குடியில் ஈ.பி.எஸ் ஆதரவாளர்கள் சுவர் விளம்பரங்களில் உள்ள ஓ.பி.எஸ் பெயரை அழித்தனர்

தூத்துக்குடியில் ஈ.பி.எஸ் ஆதரவாளர்கள் சுவர் விளம்பரங்களில் உள்ள ஓபிஎஸ் பெயரை அழித்தனர்.
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் விஸ்பரூபம் எடுத்தநிலையில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்கள் தலைமையில் வெவ்வேறு அணிகள் செயல்பட தொடங்கியிருக்கின்றன.
இந்தநிலையில் நேற்று அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடைபெற்றது. அதில் ஓ.பன்னீர்செல்வம் முன்மொழிந்த தீர்மானங்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டன. மேலும் அங்கு எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களால் அவமானப்படுத்தப்பட்ட பன்னீர்செல்வம், தனது ஆதரவாளர்களோடு கூட்டத்தைவிட்டு வெளியேறினார்.
ஒற்றை தலைமையை மையமாக வைத்து கூட்டப்பட்ட பொதுக்குழுவிற்கு ஓ.பன்னீர்செல்வம் கடுமையாக எதிர்த்தார். நீதிமன்றம் வரை சென்றார். அதன் மூலம் ஒற்றை தலைமை தீர்மானம் நிறைவேற்றப்படாமல் போனது. அதனால் எதிர்பார்த்திருந்த எடப்பாடி பழனிசாமி எமாற்றம் அடைந்தார். ஆனாலும் அதற்கான வாய்ப்பாக அடுத்தமாதம் 11ம் தேதி மீண்டும் பொதுக் குழு கூட்டப்படும் என அறிவித்துள்ளனர். அதனையும் தடுக்க ஓ.பன்னீர்செல்வம் முயற்சி செய்து வருகிறார். இதற்கிடையே எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள், தங்களின் முழு ஆதரவையும் நிரூபிக்க தொடங்கிவிட்டனர்.
அதிமுக எம்ஜிஆர் இளைஞர் அணி மாவட்ட துணை செயலாளர் வலசை வெயிலுமுத்து உள்பட தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் ஆதரவாளர்கள், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை சேர்த்து வரையப்பட்டிருக்கும் சுவர் விளம்பரத்தில் ஓ.பன்னீர்செல்வம் பெயரை மட்டும் அழித்து அகற்றி விட்டனர். இது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.